ஓமலூர், ஜூன் 20: சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தற்போது வைகாசி-ஆனி மாத பருவத்திற்கு ஏற்ற நெல் விதைகள், தேவையான அளவு இருப்பு உள்ளது. அதே போல, மக்காச்சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு, தினை மற்றும் சாமை விதைகளும், துவரை, தட்டை பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, அவரை, பீன்ஸ் போன்ற விதைகளும், எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு ஆகிய விதைகளும் விற்பனைக்கு உள்ளது. இதில், வீரிய கலப்பின விதைகள் மற்றும் ரக விதைகள், தற்சமயம் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளின் தரம் குறித்து விதை ஆய்வு பிரிவு ஆய்வாளர்களால் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், 1.088 மெட்ரிக் டன் அளவிலான ரூ.23.765 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைகளை அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது, கண்டிப்பாக விலைப்பட்டியல் கேட்டு பெற வேண்டும். மேலும், விதைகளின் பயிர் ரகம், விதை குவியல் எண், விதை தரம் மற்றும் விதை காலக்கெடு ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும். இதனால், நல்ல தரமான விதைகளை விதைப்பதோடு, கூடுதல் மகசூல் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.