ஒடுகத்தூர், ஜூலை 4: ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(82). இவரது அண்ணன் ஜெயராமன்(85). இவர்கள் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு மகன்கள், மகள்கள் உள்ளனர். இருவரது மனைவிகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்நிலையில், பலராமன் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து அவரை பாராமரித்து வந்தனர்.
ஆனால், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பலராமன் உடல்நிலை மோசமாகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலை கேட்டு சோகத்தில் இருந்த அண்ணன் ஜெயராமன் தனது தம்பியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் தனது தம்பி சடலத்தின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த ஜெயராமன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தனது தம்பி இறந்த துக்கத்தில் இருந்த அண்ணனும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர்களின் இருவரின் சடலங்களையும் அருகருகே புதைப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒடுகத்தூர் அருகே தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் இறந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.