புவனகிரி, ஆக. 19: சிதம்பரம் அருகே நள்ளிரவில் பைக்கில் சென்ற தம்பதியிடம் மர்ம நபர் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே பொன்னந்திட்டு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (32). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்தோஷ், அவரது மனைவி சுதா (28), மகன்கள் சாய்சுதன் (6), சாய் சர்வன் (4) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து பொன்னந்திட்டு கிராமத்துக்கு பைக்கில் சென்றனர்.
கடலூர்-சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் வரும் போது, இவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாவின் கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட சுதா, செயினை இறுக்கி பிடித்து கொண்டு, மற்றொரு கையால் மர்ம நபரின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் இரு பைக்குகளும் மேம்பாலத்திலேயே கவிழ்ந்தது. இதில், சுதாவுக்கும், சந்தோஷூக்கும் வலது கால் முட்டி மற்றும் 2 கைகளில் காயம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவருக்கும் எவ்வித காயமும் இல்லை.
இதையடுத்து மர்ம நபர் பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரது செல்போன் மட்டும் சம்பவ இடத்திலேயே கிடந்தது. இதை பார்த்ததும், அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் புதுச்சத்திரம் போலீசார், மர்ம நபர் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் குள்ளஞ்சாவடி செல்லும் சாலையில் கீழே விழுந்து அடிபட்டதாக கூறி அஜித்குமார் என்பவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், வடலூரை சேர்ந்த அஜித்குமார் ஆலப்பாக்கம் மேம்பாலத்தில் தம்பதியிடம் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சுதா கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.