சிவகங்கை, செப்.7: தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. 2023-2024ம் கல்வியாண்டிற்கான இலக்கிய திறனறி தேர்வு அக்.15 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் 1500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியே மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 சதவீதம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள், மீதமுள்ள 50 சதவீதம் அரசுப்பள்ளி மற்றும் பிற தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் இத்தேர்வு நடைபெறும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்தலைநகரில் இத்தேர்வு நடைபெறும். அனைத்து வகை பள்ளிகளில் பயில்பவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி தலைமையாசிரியரிடம் செப்.20ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.