மதுரை : தமிழ்நாட்டின் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கேரள மாநில எல்லையோரம் உள்ள தென்காசி, தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் இருந்து பயோ மெடிக்கல் வேஸ்ட் எனப்படும் மருத்துவ கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படும் அவலம் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், என்று கூறி தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசும் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. அதில், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் குறிப்பிட்டுள்ளபடி, எந்த உத்தரவுகளை எந்த மாவட்டத்திலும் முறையாக பின்பற்றவில்லை, குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள் கொட்டுவது என்பது தொடர்வதையாகி வருகிறது; ஆகையால் இதனை முழுமையாக கண்காணிக்க வேண்டும், அவ்வாறு முழுமையாக கண்காணிக்காத அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கோரி சிதம்பரம் மீண்டும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காவல் துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கண்காணிப்பு செய்வதில் தென்காசியில் மட்டும் கடந்த 2020 -2022ம் ஆண்டுகளில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்ட லாரிகள் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். …