நெல்லை, ஆக. 12: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தென்மே ற்கு பருவமழைக் காலமாகும். இந்த மாதங்களில் குறைந்த அளவு மழையளவு இருக்கும். எனினும் இந்த ஆண்டு கடும் வறட்சி நீடித்து வருகிறது. ஏற்கெனவே ஜூன் மாதம் முழுவதும் கடும் வெயில் வாட்டி எடுத்தது. ஜூலை மாதம் மட்டும் ஓரளவு காற்று வீசியது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதல் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 7ம் தேதி 104 டிகிரி வெயில் பாளையங்கோட்டையில் பதிவானது. அதற்கு அடுத்த நாள் 8ம் தேதி தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 103 டிகிரி வெப்பம் பதிவானது. இந்நிலையில் நேற்றும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, பாளையில் 100.2 டிகிரி வெப்பம் பதிவானது.