ஆவடி: ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 116 ஏக்கர் பரப்பளவில், 1993ல் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டது. இதில், 2 செக்டரிலும் சேர்த்து 4,000 குடியிருப்புகள் உள்ளன. இங்கு விளையாட்டு திடல், மகளிர் மேம்பாட்டிற்கான இடம், நியாய விலைக்கடை போன்றவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கவில்லை. பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், 43 மனைகளும் 2 கடைகளும் உருவாக்கப்பட்டு, அதனை விற்பனை செய்ய டெண்டர் கோரப்பட்டதுடன், அதற்கான பணிகளையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செய்து வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கியபோது, பேருந்து நிலையம் வரும் என்று கூறிய இடத்தை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பாக மாற்றும் முடிவுக்கு அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பல்வேறு வகையில் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அப்பகுதி மக்கள் கூறுகையில், வீட்டு வசதி வாரிய நிர்வாகம், தற்போது வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி டெண்டரை, உடனடியாக ரத்து செய்து, அந்தந்த துறையிடம் நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.