திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் மாநில செயற்குழு கூட்டம் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். இதில், செயலாளர் கற்பகம், துணைத் தலைவர் கோமதி பொருளாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவி இந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கிராம செவிலியருக்கு 5 ஆயிரம் மக்கள் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
பதிவு செய்யும் இணையதளத்தில் வேகம் மிகவும் குறைவாக உள்ளதால், இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியருக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கைபேசி மற்றும் கணினி ஆகியவை செயலிழந்து விட்டதால் புதிதாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற துறைகள் சார்ந்த பணிகளை கிராம செவிலியருக்கு வழங்கக் கூடாது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர்.