Monday, May 29, 2023
Home » தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 17 ஆண்டுகளுக்கு பிறகு பழநி மலைக்கோயிலில் குடமுழுக்கு: விண்ணை பிளந்தது ‘அரோகரா’ கோஷம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 17 ஆண்டுகளுக்கு பிறகு பழநி மலைக்கோயிலில் குடமுழுக்கு: விண்ணை பிளந்தது ‘அரோகரா’ கோஷம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

by kannappan

பழநி: பார் போற்றும் பழநி மலைக்கோயிலில் திருப்புகழ் ஒலிக்க, பக்தர்களின் விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம் முழங்க தண்டாயுதபாணிக்கு தமிழில் குடமுழுக்கு நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், 17 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்தது. ரூ.15 கோடியில் மூலவர், தங்க விமானம், ராஜகோபுரம், வடக்கு – தெற்கு கோபுரங்கள், விமானங்கள், மலைக்கோயில் உள் திருச்சுற்று, வெளி திருச்சுற்றில் உள்ள மண்டபங்கள், மதில்கள், உள்மண்டபங்கள், மகா மண்டபம், யானைப்பாதை, படிப்பாதையில் உள்ள மண்டபங்கள் மற்றும் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த டிச.25ம் தேதி கும்பாபிஷேகத்திற்கு முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. கடந்த ஜன.23ம் தேதி முதற்கால யாக வேள்வி துவங்கியது. நேற்று முன்தினம் வரை 7 கால வேள்விகள் நடந்தன. தொடர்ந்து அன்று பாதவிநாயகர், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், சேத்ரபாலர், சண்டிகாதேவி, இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுதசுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் முதலான படிப்பாதையில் உள்ள உபதெய்வ சன்னதி விமானங்களுக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 8ம் கால வேள்வி நடந்தது. தொடர்ந்து இறைவன் அனுமதி பெறுதல், ஐங்கரன் வழிபாடு, பன்னிருதிருமுறை ஓதுதல், சந்திரன் வழிபாடு, 12 முளைப்பாலிகை வழிபாடு, நீர்க்கடவுள் வழிபாடு நடந்தது. தொடர்ந்து காலை 7.15 மணிக்கு நறும்புகை, விளக்கு, படையல், தூமொழி பொழிதல், வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், கந்தபுராணம், திருவொளி வழிபாடு, பேரொளி வழிபாடு போன்றவை நடந்தது. தொடர்ந்து காலை 8.15 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த கலசங்கள் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.கும்பாபிஷேகத்தின்போது அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தங்ககோபுரத்தின் அருகில் அமர்ந்திருந்தனர். மூவரும் பச்சைக்கொடி அசைத்து கும்பாபிஷேகத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து காலை 8.46 மணிக்கு 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, 108 ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தரலங்காரம், கந்த சஷ்டி கவசம் என முருகனை போற்றி பாட  பக்தர்களின் விண்ணை பிளக்கும் வகையில் ‘அரோகரா’ கோஷம் முழங்க, தங்க கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பாம்பன் சாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒலிக்கப்பட்டன. அதேநேரத்தில் மலைக்கோயிலில் உள்ள சிவன், மலைக்கொழுந்து அம்மன், விநாயகர் உள்ளிட்ட திருச்சுற்று தெய்வங்களின் சன்னதி கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண பொது தரிசனத்திற்கு 2,000 பேர், விஐபி தரிசனத்திற்கு 4000 பேர் என 6,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர கும்பாபிஷேகத்தை காணவும், சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பழநி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. பழநி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், லேமினேஷன் செய்யப்பட்ட முருகன் படம்  அடங்கிய 2 லட்சம் பிரசாத பைகள் வழங்கப்பட்டன. பழநி நகரில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பஸ் நிலையம் புதுதாராபுரம் சாலையில் உள்ள மால்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பழநி நகருக்கு  போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச டவுன் பஸ் சேவை  ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் பக்தர்கள் இலவசமாக பழநி நகருக்கு வந்து சென்றனர். கும்பாபிஷேகத்தையொட்டி, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* 3 முறை சுற்றிய ஹெலிகாப்டர்கும்பாபிஷேகத்தின்போது மலர் தூவுவதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேகமாக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மாலை பழநி வந்தது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழநியாண்டவர் கலைக்கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகம் முடிவடைந்த பின் காலை 9.01 மணிக்கு ஹெலிகாப்டர் பழநி மலைக்கோயிலை 3 முறை வட்டமடித்தது. முதலில் தங்க கோபுரத்திற்கும், பிறகு ராஜகோபுரத்திற்குமென 3 முறை ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.* 18 எல்இடி திரைகளில் கண்டுகளிப்புகும்பாபிஷேக நேரத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், எஞ்சிய பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காணும் வகையில் அடிவாரம், கிரிவீதி, பஸ் நிலைய பகுதிகளில் சுமார் 18 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த எல்இடி திரைகளில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.8 சண்முகருக்கு திருக்கல்யாணம்கும்பாபிஷேத்தையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு வள்ளி – தெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தையொட்டி வள்ளி – தெய்வானை சமேத சண்முகருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.* தைப்பூச திருவிழா நாளை துவக்கம்பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழா நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் பிப்.3ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப்.4ம் தேதி நடக்க உள்ளது. பிப்.7ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும்.    * இன்றும், நாளையும் எந்த கட்டணமும் கிடையாது பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பக்தர்களுக்கு தரிசனம் செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. அதேபோல் இன்று, நாளை (ஜன.28, 29) பக்தர்கள் தரிசனம் செய்ய எவ்வித கட்டணமும் கிடையாது. அதுபோல் மலைக்கோயிலுக்கு வின்ச், ரோப்காரில் சென்று வர பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது. மேலும் நேற்று துவங்கிய பக்தர்களுக்கு இலவச பிரசாத பை வழங்கும் திட்டம் தொடர்ந்து இன்றும், நாளையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி சலுகை அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi