அரியலூர், ஆக.12: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
அரியலூர் மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் இளங்கலை பட்டதாரிகள் வரும் ஆக.14 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த இளம் தொழில் முனைவோருக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் அதிகபட்ச நிதி உதவியாக ஒரு லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து – 40-க்குள் இருக்க வேண்டும். இளங்கலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார். இத்திட்டத்தின் மூலம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ஒரு இலட்சம் வரை பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். வங்கி கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) குறித்து கூடுதல் விபரங்கள் அறிய https://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) குறித்து கூடுதல் விபரங்கள் அறிய https://pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
எனவே தகுதியுடைய தொழில் தொடங்கவிருக்கும் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையுடன் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆகஸ்ட் 14க்குள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.