கோவை, ஆக. 17: உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27ல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா தொழிலில் ஈடுபடுவோர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் சுற்றுலாத்தொழிலில் ஈடுபடுவோரையும், தமிழ்நாட்டில் சுற்றுலா தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவோரை சுற்றுலா பயணமுகவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.
சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாகச சுற்றுலா, சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா விளம்பர பொருள் போன்ற 17 வகையான சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது.
இதற்கு கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொழில் சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். இதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.