சேலம், ஜூன் 25: இல்லம் தேடி கல்வி திட்டத்தில், 2024-2025ம் கல்வியாண்டில் சிறப்பான செயல்பாட்டிற்காக தமிழக அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கும் வகையில், கடந்த 2021-2022ம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தன்னார்வலர் நியமிக்கப்பட்டு, தினசரி மாலை 1 முதல் 1.30 மணி நேரம் வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் 2024-2025ம் கல்வியாண்டில், 21 ஒன்றியங்களில் 4,668 மையங்களில் 4,668 தன்னார்வலர்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், சிறப்பான செயல்பாட்டிற்காக தமிழக அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீருக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2024-2025ம் ஆண்டிற்கான 3 பருவங்களுக்கும், அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள 4,668 தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்கப்பட்டது.
அப்போது மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் அடிப்படை திறன்களை கற்பிக்கும் முறை, எண்ணும் எழுத்தும் திட்டம், மைய செயல்பாடுகள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட செயலியில் மாணவர்களின் வருகை பதிவை பதிவு செய்யும் முறை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை ஊக்குவிக்கும் தன்னார்வலர்களுக்கு, 3 பருவங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் கையேடுகள், சிறிய வார்த்தைகள் மற்றும் படங்களுடன் கூடிய அட்டைகள், சுவரொட்டிகள் ஆகியவை வழங்கப்பட்டது. மாணவர்களின் கற்றல் நிலையினையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் விதமாக, நம்ம ஊரு கதை என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் 44 சிறந்த கதைகள் தேர்தெடுக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் ஒருவர் வீதம் முன்னிலை தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு மையங்களை பார்வையிடுதல், நடைபெறாத மையங்களை கண்டறிந்து ஊக்குவித்தல், எஸ்எம்சி கூட்டத்தில் கலந்து கொண்டு மைய செயல்பாடுகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
உதவித்தொகை பெறக்கூடிய 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் ஆதார் எண் கண்டறியும் பணியினை மேற்கொண்டனர். மாவட்டத்தில் 443 தன்னார்வலர்களைக் கொண்டு 42,687 எஸ்சி., எஸ்டி., குடும்பங்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாணவர் சேர்க்கை அதிகபடுத்த 210 தன்னார்வலர்கள் மாதிரி பள்ளி தூதுவர்களாக செயல்பட்டனர். மேலும், இடைநின்ற மாணவர்களை கண்டறியும் விதமாக, 29 தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்து அப்பணியினை மேற்கொண்டனர். அன்பு கரங்கள் என்ற திட்டத்தில் பெற்றோரை இழந்த மற்றும் தாய் அல்லது தந்தை ஒருவரை இழந்த குழந்தைகளின் விவரங்களை கண்டறிந்து செயலியில் பதிவு செய்வதற்கு 360 தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்து அப்பணியினை மேற்கொண்டனர். மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்திற்காக, 3,752 தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்து பெயர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
ேசலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் தன்னார்வகளின் வருகை சதவீதம், முன்னிலைத் தன்னார்வலர்கள் அதிக எண்ணிக்கையில் மையப்பார்வை, மாநில திட்டத்திலிருந்து கொடுக்கப்படும் அனைத்து விவரங்களை உடனுக்குடன் அனுப்புதல், முதன்மைக்கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், மாவட்ட திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர், வட்டார கல்வி அலுலவர்கள், மேற்பார்வையாளர்கள் ஆசிரிய பயிற்றுநர்கள் அதிக எண்ணிக்கையில் மையப்பார்வை உள்ளிட்ட காரணங்களுக்காக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.