தமிழ்நாடு அரசின் விடியல் பயண திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டில் மட்டும் 41.48 கோடி மகளிர் பயனடைந்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றதும், அரசு நகர பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை செயல்படுத்தி, கையெழுத்திட்டார். இந்த விடியல் பயண திட்டத்தில், மகளிர் மட்டும் அல்லாது திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இத்திட்டம் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனைகளில் முன்னிலை வகிக்கிறது. ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் 304 நகர பேருந்துகளும், ஒரு மப்சல் பேருந்து தாளவாடியிலும் என மொத்தம் 305 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ஏப்ரல் மாதம் வரை என மொத்தம் நான்காண்டுகளில் 41 கோடியே 48 லட்சம் 90 ஆயிரம் மகளிர்கள் அரசு நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்துள்ளனர். இதேபோல், மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தினால், வேலைக்கு செல்வதற்கும், வெளியிடங்களுக்கு செல்லும் போக்குவரத்து செலவு மாதம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை மீதமாவதால், மிகுந்த பயனுள்ளதாக உள்ளதாக பயனடைந்த மகளிர்கள் தெரிவித்துள்ளனர்.