செங்கல்பட்டு, மே 31: தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 3,520 கிலோ கஞ்சா மற்றும் 250 கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதை பொருட்களை எரித்து அழிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் ஜி.ஜே.மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு, தமிழ்நாடு முழுவதும் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினரால் ரூ.4 கோடி மதிப்புள்ள சுமார் 3,520 கிலோ கஞ்சா, 250 கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் அமல்ராஜ், போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஐஜி செந்தில்குமாரி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் மயில்வாகனம் உள்ளிட்டோர் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டது. அப்போது, கஞ்சா, கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, கஞ்சா விற்பனையை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து என முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.