மதுரை, ஆக. 5: பசுமை நடை இயக்கத்தின் சார்பில், மதுரையைச் சுற்றியுள்ள தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த இடங்களின் சிறப்புகளை மாதந்தோறும் முதல் வாரத்தில் சென்று அறிந்து கொள்வது வழக்கம். இதன்படி, மதுரை மாவட்டம், விராட்டிபத்து மற்றும் அச்சம்பத்து பகுதிக்கு நேற்று பசுமை நடையாக சென்ற இந்த இயக்கத்தினர், கண்ணகியின் தொன்மம் குறித்து அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் பேராசிரியர் சுந்தர்காளி தலைமை வகித்து பேசுகையில், ‘‘மதுரையில் வசிக்கும் அனைவருக்கும் கண்ணகியின் கதை தெரியும்.
இளங்கோவடிகளுக்கு முன்பிருந்தே சங்க இலக்கியத்தில் செவி வழியாக, வாய்மொழி இலக்கியமாக இந்த பழமையான கதை இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டிலோ அல்லது கேரளத்திலோ கண்ணகி பெயரில் இல்லாவிட்டாலும், வெவ்வேறு பெயர்களில் இன்றும் கண்ணகி வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனால், ஈழத்தில் சிங்களர்களிடத்திலும், தமிழர்களிடத்திலும் கண்ணகி என்ற பெயர் கொண்டே வழிபாடு நடந்து வருகிறது’’ என்றார். இந்நிகழ்வில் பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர் ரகுநாத், மருத்துவர் ராஜண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.