Tuesday, July 23, 2024
Home » தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ₹2,079 கோடி வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமித்ஷாவிடம் டிஆர்.பாலு நேரில் மனு

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ₹2,079 கோடி வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமித்ஷாவிடம் டிஆர்.பாலு நேரில் மனு

by kannappan

புதுடெல்லி: ‘தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதியாக ரூ.2079 கோடி வேண்டும். அதில், ரூ.550 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மனு வழங்கியுள்ளார். தமிழகத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று, சேதங்களை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்ச்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், பெரியகருப்பன் ஆகியோர் ்அடங்கிய குழுவ அமைத்துள்ளார்.இந்நிலையில், திமுக மக்களவை குழு தலைவரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், ‘தமிழகத்தில் கனமழை காரணமாக 25 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.550 கோடியும், மொத்தமாக ரூ.2079 கோடியும் வழங்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் அளித்த பேட்டி வருமாறு: தமிழகத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் 25 மாவட்டங்கள்பாதித்துள்ளன. அதில், 12 மாவட்டங்கள் அதிகமாக பாதித்துள்ளன. கடந்த 10 நாட்களாக இந்த பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். நிவாரணப் பணிக்காக ரூ.300 கோடியை ஒதுக்கியுள்ளார். கனமழையால் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களும், 526 ஹெக்டேர் தோட்ட பயிர்களும் அழிந்துள்ளன. 54 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரையில் 9,600 குடிசைகளும், 2,100 கட்டுமான வீடுகளும் சேதமடைந்து உள்ளன. தமிழகத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அளித்துள்ள அறிக்கையின்படி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, இன்று கோரிக்கை மனு வழங்கபட்டது. அதில், தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மொத்தம் ரூ.2,079 கோடி வழங்கும்படியும், இதில் உடனடியாக ரூ.550 கோடி வழங்கும்படியும் கோரப்பட்டுள்ளது.மனுவை பரிசீலித்த அமித்ஷா, தமிழக மழை பாதிப்புகளை பார்வையிட 6 பேர் கொண்ட ஒன்றிய அரசு குழுவை இன்றே (நேற்று) அனுப்பி வைப்பதாகவும், இக்குழு அறிக்கை அளித்த பிறகு அதன் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்குவதாகவும் உறுதி அளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமித்ஷா தொலைபேசியில் பேசினார். அப்போது, உடனடியாக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் கோரினார். இவ்வாறு அவர் கூறினார்….

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi