சென்னை, ஜூன் 11: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இவர்கள் தினசரி அவசர கதியில் அலுவலகம் செல்வதால், பெரும்பாலான வீடுகளில் சமையல் அறை என்பது காட்சிபொருளாகத் தான் காட்சி அளிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சமையல் செய்வதற்கு நேரம் இருப்பதில்லை என்றே சொல்லலாம். இப்படிபட்ட காலகட்டத்தில், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக வீட்டிற்குள் இருந்தே உணவுகள் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மொபைல் செயலிகள் மூலம் வாங்கிட முடியும். இதன் காரணமாக பல லட்சம் இளைஞர்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
மழை, வெயில் என எந்த காலமாக இருந்தாலும் உணவு டெலிவரி வேலை படு பிசியாக நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில், இந்த நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இப்படி பரபரப்பாக இயங்கும் இந்நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களை கூட பொருட்படுத்தாமல், பணிபுரிகின்றனர்.
ஒதுங்குவதற்கு கூட சரியான இடம் இல்லாத நிலை உள்ளது. அதிலும் இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். அவசர தேவைகளுக்காக ஒதுங்க கூட முடியாத நிலை நீடிக்கிறது. கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் சாலையோரங்களில் ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற நிலை உள்ளது. இரவில் கூட பெண்கள் இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரிம் செய்வதை தெருக்களில் காண முடியும். சில நாட்களுக்கு முன்டெல்லியில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரிிக்கும் பணியாளர்களின் மாநாடு நடைபெற்றது. தற்போது தங்களுக்கு போதிய பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்களுக்கும் பிற ஊழியர்களைப் போல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் ஆன்லைன் உணவு டெலிவரி பணியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இந்தியாவிலேயே முன்னோடியாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பயன் பெறும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக இலவச ஏசி ஓய்வறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது. தற்போது இந்த திட்டம் இன்று முதல் தொடங்கப்ட உள்ளது. சோதனை அடிப்படையில், அண்ணா நகர், கே.கே.நகரில் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கான தங்கும் ஓய்வறைகள் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவிருக்கிறது. தமிழகத்தில் முதல் முறையாக, உணவு டெலிவரி ஊழியர்களுக்காக அதுவும் குளிர்சாதன வசதிகொண்ட ஓய்வறைகள் அமைக்கப்படவிருக்கின்றன. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் அண்ணாநகர், கே.கே.நகரில் இன்று திறக்கப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகரில் இதுபோன்ற ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஓய்வறைகளை ஒரே நேரத்தில் 25 பேர் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
ஓய்வறைகளின் வாயிலில் 20 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவு டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதால், சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. குளு குளு ஏசி வசதியுடன் செல்போன் சார்ஜிங் பாய்ன்ட் இங்கு அமைக்கப்பட்டது. இதன் மூலம் இரவில் உணவு டெலிவரி செய்யும் பெண்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கு கட்டணம் இன்றி இளைப்பாறிக் கொள்ளலாம். முதலாவதாக சென்னையில் அதிக உணவு டெலிவரிம் செய்யும் பகுதியில் இந்த ஓய்வறை திட்டம் அமலுக்கு வருகிறது. பின்னர் படிப்படியாக சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்படும். வேகாத வெயிலிலும், கடும் குளிரிலும், கனமழையிலும் அயராமல் வேலை செய்யும் உணவு டெலிவரி பணியாளர்களுக்கு உண்மையிலேயே ஓய்வறை திட்டத்தின் மூலம் பயன் கிடைக்கும் . இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இது மாபெரும் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். இந்த திட்டத்தை தமிழக முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே உணவு டெலிவரிம் செய்யும் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதே போல இந்தியாவுக்கே முன்னோடியான இந்தத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பது பாராட்டுக்குரிய ஒன்று.
என்னென்ன வசதிகள்?
இந்த ஓய்வறையானது 600 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது. இதில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும், மேலும் 20 டூவிலர் வரை பார்க்கிங் செய்யும் முடியும். இங்கு ஓய்வெடுக்க கட்டணம் கிடையாது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பிற்குப் பிரச்னையில்லை. குறிப்பாக, இது பெண்களுக்கும், இரவில் பணிபுரிபவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.