கம்பம், ஆக. 13: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,250 கிலோ ரேஷன் அரிசியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம், கேரளா மாநில எல்லை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு நேற்று அதிகாலை கம்பம்மெட்டு சாலையில் தேனி மாவட்ட பறக்கும் படை துணை வட்டாட்சியர் பரமசிவம் தலைமையில் ஃபுட்செல் போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 25 பிளாஸ்டிக் சிப்பங்களில் 1,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை பறக்கும் படை துணை வட்டாட்சியர் பரமசிவம் உத்தமபாளையம் புட்செல் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்தது உத்தமபாளையம் புட்செல் போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ராஜாமணி மகன் ராஜேஷ் கண்ணா என்பவரை கைது செய்துகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்பை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.