மதுரை, பிப் .17: மனிதநேய ஜனநாயக கட்சியின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம், மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள விடுதியில் நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரூண் ரசீது தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் ஒன்றிய அரசு வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இச்சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் எந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறதா, அதே வழிகாட்டுதல்கள், சம்பிரதாயங்கள் தொடர வேண்டும் என்பதையே, வழிபாட்டு தலங்களுக்கான சிறப்பு சட்டம் சொல்கிறது.
அதனை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்த நிலையில் இருக்கும், அனைத்து சமுதாய ஆயுள் தண்டனை கைதிகளையும் பாரபட்சமின்றி விடுவிக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதனை ஏற்றால் மட்டுமே கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வோம் என ஒன்றிய அரசு கூறுவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றத்தை பொருத்தவரை, மோதல் போக்கை உருவாக்க நினைப்பவர்களை இப்பகுதி மக்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.