தஞ்சாவூர், ஆக.23: தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். செயல்படாத காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை நீக்கி நடுநிலை உள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்களை காக்க உடனே தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகத்திற்கு ஆய்வு குழு அனுப்பி காவிரிநீர் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு, மழை பொழிவு அளவு ஆகியவற்றின் உண்மை நிலையை அறிந்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஏராளமானோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிமொழியன், துரை.ரமேஷ், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன், தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் கார்த்திகேயன், மனிதநேய ஜனநாயக கட்சி அகமது கபீர், தமிழர் தேசிய களம் தலைவர் கலைச்செல்வம், ஆழ்துளைக் கிணற்று பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி உரிமை மீட்பு குழு செந்தில் வேலன், தனசேகரன், தமிழ் தேசிய பேரியக்கம் பழ.ராஜேந்திரன் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கம், விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.