நன்றி குங்குமம் டாக்டர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூகரீதியாகவும் பல்வேறு சவால்களை சந்தித்து சாதித்து வருகிறார்கள் திருநங்கைகள். அதன் இன்னொரு அடையாளமாக செவிலியர் பணியிலும் கால் பதிக்க முடியும் என்று உலகுக்கு உரக்க சொல்லியிருக்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபி.தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சேர்வைக்காரன் மடம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்றவரான ரத்தினபாண்டி, தேன்மொழியின் ஒரே மகனாக பிறந்தவர் அன்புராஜ். 13-வது வயதில் அன்புராஜின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. அன்புராஜ் படிப்படியாக திருநங்கையாக மாறினார். இது இயற்கைதான் என்று ஏற்றுக் கொண்ட பெற்றோர் காட்டிய அரவணைப்பால் தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார். பிளஸ் 2-வுக்கு பிறகு பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர்ந்தார். நர்ஸிங் கல்வியை முடித்த பின்னர் தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூன்றரை ஆண்டுகள் நர்ஸாகப் பணியாற்றினார். அதேவேளையில் மருத்துவமனை மேலாண்மையில் எம்.பி.ஏ படிப்பை தொலைதூரக் கல்விமூலம் இந்த ஆண்டு நிறைவு செய்தார். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஜூலையில் நடந்த நர்ஸ் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து கடந்த டிசம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் அன்பு ரூபிக்கு நர்ஸ் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் நர்ஸாக பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்ற அன்பு ரூபி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே தனக்கு பணி வழங்க வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவரை நாமும் வாழ்த்துவோம்!– கௌதம்