
சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு இயல்பைவிட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடித்து வருகிறது. அதனால் பல இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், ஓரிரு இடங்களில் இயல்பைவிட கூடுதலாக வெயில் மற்றும் வெப்பம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 16ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.