மண்டபம்,மே 19: மண்டபம் கேம்ப் பகுதியில் பழமையான ஓட்டு கொட்டகையில் இயங்கி வரும் துணை தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண்டபம் கேம்ப் அகதி முகாம் வளாகத்தில் துணை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தில் மண்டபம் பேரூராட்சி, மரைக்காயர்பட்டிணம் ஊராட்சி, வேதாளை ஊராட்சி, சாத்தக்கோன் வலசை ஊராட்சி ஆகிய பகுதிகளை அடங்கிய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தபால் நிலையம் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டுக் கொட்டகையால் அமைக்கப்பட்ட பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மழை காலங்களில் தண்ணீர்களும் சேதம் அடைந்த ஓடு வழியாக உள்ளே இறங்கி ஆவணங்களையும் சேதப்படுத்தும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் அதிக வருவாயை ஈட்டித்தரும் இந்த தபால் நிலையம் அலுவலகத்திற்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட தபால் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.