Sunday, June 4, 2023
Home » தன வரவை தருவார் தணிகாசலம்

தன வரவை தருவார் தணிகாசலம்

by kannappan

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக  உள்ளது திருத்தணி. இக்கோயில் கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் அமைந்துள்ளது. முருகக் கடவுளின் பெயர் தணிகாசலம் எனவும் கூறப்படுகிறது. முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் இதற்குத் தணிகை என பெயரமைந்தது.முருகப் பெருமான் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்து அருள்கிறார். திரேதா யுகத்தில் ராவணனை போரில் வென்று அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகார பூஜைகள் செய்ய ராமேஸ்வரம் சென்று திரும்பும் வழியில் ராமர், சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கிணங்க,  திருத்தணிகையில் முருகப் பெருமானை வழிபட்டு மனச் சாந்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. துவாபர யுகத்தில் அர்ஜுனன் தென் பகுதிக்கான தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் திருத்தணி முருகனை தரிசித்து ஆசி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.திருத்தணிகையில் முருகனை வழிபட்டு தாரகாசூரனால் கவரப்பட்ட தமது சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது. திருத்தணிகையில் பிரம்மதேவர் முருகப் பெருமானைப் பூஜித்துப் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை திரும்பப் பெற்றார்.  மேலும்,  சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப்பெற்றார். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில், பாதித் தொலைவில் மலைபடிகளை அடுத்த வடபக்கத்தில் பிரம்ம தேவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இது பிரம்மசுனை என அழைக்கப்படுகிறது. இதன் தென்கரையில் பிரம்மேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனால் தேவலோகத்திலிருந்து கவர்ந்து கொண்டு செல்லப்பெற்ற, சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, சிந்தாமணி, கற்பகதரு முதலிய செல்வங்களை மீண்டும் பெறுவதற்காக இந்திரன் முருகனை இங்கு பூஜித்தான். திருத்தணிகை மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஒரு சுனையில்,  நீலோற்பல மலர்க்கொடியை நட்டு வளர்த்து அதன் பூக்களைக் கொண்டு காலை, மாலை, நண்பகல் என்று மூன்று வேளைகளிலும் இந்திரன் முருகனை பூஜித்தான். அதுபோல் அவன் ஸ்தாபித்து,  வணங்கி அருள் பெற்ற விநாயகருக்குச் செங்கழுநீர் விநாயகர் என்று பெயர். அவனால் உண்டாக்கப் பெற்ற நீலோற்பல மலர்ச்சுனை இந்திர நீலச்சுனை என்னும் பெயர் பெற்ற தீர்த்தமாக மலைக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேராக இருக்கின்றது. இது கல்கார தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தகத்தின் நீர்தான் சுவாமியின் திருமுழுக்கிற்கும், திருமடைப்பள்ளிக்கும் மற்றும்  பூஜை செய்வதற்கும் தனிச்சிறப்பாகப் பயன் படுத்தப்படுகிறது. அதனால் இத்தீர்த்தத்தைத் தொலைவிலிருந்து தொழுதல் வேண்டுமேயன்றி வேறு எவ்வகையிலும் நாம் பயன்படுத்துதல் ஆகாது.பதி, பசு, பாசம் என்னும் இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் இயல்புகளைக் கூறும் சைவ சித்தாந்த நுட்பங்களை இங்கு முருகனை வழிபட்டுத் திருநந்தித் தேவர் அறிவுறுத்தப் பெற்றார். அவன் பொருட்டு முருகப் பெருமான் வரவழைத்த “சிவதத்துவ அமிர்தம்” என்னும் நதியே இப்பொழுது நந்தியாறு என அழைக்கப்படுகிறது. முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது.தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தினை நாணாகவும் கொண்டு கடைந்தனர். அங்ஙனம் கடைந்த போது வாசுகி நாகத்தின் உடலில் பல வடுக்களும், புண்களும், தழும்புகளும் ஏற்பட்டு பெரிதும் துயர் விளைவித்தன. ஒரு சுனையில் நாள்தோரும் முறையாக நீராடி முருகனை வழிபட்டு, வாசுகி நாகம் அத்துயரங்களினின்று நீங்கி உய்த்தது. ஆதிசேச தீர்த்தம் விஷ்ணு தீர்த்தத்திற்கு மேற்கே மலைப் பாதைக்குத் தென்புறம் இருக்கிறது. இங்கு முருகனை வழிபட்டு, அகத்திய முனிவர் முத்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் பெற்றார். அவர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தத்திற்குத் தென் கிழக்கில் உள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் தணிகை மலையில் தமக்கு சங்கீத ஞானம் வேண்டி முருகனை பூஜித்தபோது முருகப் பெருமான் அவர் நாவில் அட்சர ஆசி அருளி அவருக்கு பாடும் திறனை வழங்கினார். அன்னாரும்,  முதல் பாட்டாக ‘‘ஒம் குரு குஹாய நம” என்று முதல் அடி எடுத்து பாடலைத் தொடுத்தார். முருகப் பெருமான் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம். திருத்தணிகை சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் கலையப்படுவதாக ஐதீகம். சரவணப் பொய்கையில் நீராடிய பின்பே படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலை சென்றடைகின்றனர். சப்த ரிஷிகள் என்று கூறப்படும் வசிஷ்டர் முதலான ஏழு முனிவர்கள் இங்கு முருகனைப் பூஜித்தனர். அவர்கள் பூஜித்த இடம் மலையின் தென்புறத்திசையில் உள்ளது. அவர்கள் அமைத்த ஏழு சுனைகளும் மற்றும் கன்னியர் கோயிலும் இங்கு உள்ளன. இந்த இடம் இப்போது ஏழு சுனை கன்னியர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. …

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi