உலகிலேயே அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசனின் தயாரிப்புக்கூடம் தீ விபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்தது. தீயின் நாக்குகள் சகலத்தையும் தீண்டி விண்ணளவு உயர்ந்தன. எடிசன் அந்த காட்சியை கொஞ்சமும் அசையாமல் பார்த்தவாறு தன் மகனை அழைத்து “உடனே உன் அம்மாவை கூப்பிடு இப்படி ஒரு காட்சியைத் தன் வாழ்நாளிலே அவள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டாள்” என்றார்.ஓடிவந்த மனைவி “லட்சக்கணக்கில் செலவழித்து கட்டிய தயாரிப்புக் கூடமும், இத்தனை காலமும் நீங்கள் செய்த ஆராய்ச்சிகள் பற்றிய முக்கிய குறிப்புகளும் அநியாயமாக அழிந்துபோகின்றனவே”என்று அலறி அழுதார்.எடிசன் கொஞ்சமும் சலனப்படாமல் “நம்மிடம் இதுவரை இருந்த கவனக்குறைவு, அலட்சியம், பொறுப்பின்மை போன்ற எல்லா குறைபாடுகளும் இந்த தீயோடு பொசுங்கிச் சாம்பலாகட்டும்,நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நம்புவோம்.இனி முதலில் இருந்து மீண்டும் நம் பணியைத் தொடங்குவோம்” என்றார்.“ஆரவாரமற்ற,சீரான கடல் ஒருபோதும் திறமை வாய்ந்த மாலுமியை உருவாக்கிய தில்லை”என்று ஒரு ஆங்கிலப் பழமொழி சொல்கிறது. வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை. நாம் வாழும்போது எத்தனை முறை விழுந்துவிழுந்து மீண்டும் மீண்டும் எழுந்து நின்றிருக்கிறோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுகிறது. அப்படி தன் வாழ்வில் விழுந்து, மீண்டும் எழுந்து தன்னுடைய தன்னம்பிக்கையால் புறக்கணிப்பை புறம் தள்ளி வெற்றிபெற்ற ஒரு தன்னம்பிக்கை தேவதை தான் ரம்யா.அழகு என்பது தோற்றத்தில் காண்பதல்ல. ஒவ்வொருவர் சிந்தனைகளும், மனதிலும் தோன்றுவதுதான். மனிதர்களை வேறுபடுத்தி காட்டும் முகமோ, தோலின் நிறமோ ஒருவரின் அழகு எனச் சொல்லிவிடமுடியாது. ஆனால் சமுதாயத்தில் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து தன்னை ஏளனமாகப் பார்த்தும் ஒதுக்கியும் சென்ற சமூகத்திற்கே தைரியமூட்டும் வகையில் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டிருக்கிறார் ரம்யா ஜே. கிறிஸ்டினா.சென்னையை சேர்ந்தவர் ரம்யா, சிறுவயதில் அசைவ உணவு ஒவ்வாமை இருந்தது. ஒரு முட்டை சாப்பிட்டால் கூட உடலில் கொப்பளங்கள் வந்துவிடும். இதனால் ரம்யா கஷ்டப்படுவதை பார்த்த அம்மா, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிகிச்சைக்கு பின் கொப்புளங்கள் குறைந்தன. ஆனால் அதற்கு பிறகு தான் வினையே ஆரம்பித்தது.கண்ணைச் சுற்றி வெண் திட்டுக்கள் வரத் தொடங்கியது. மருந்துகளின் வீரியம் காரணமாக உடலில் உள்ள மெலனின் பாதித்து நிறத்தில் வேற்றுமையை காட்டத் தொடங்கிவிட்டது. இது உடல் முழுவதும் பரவியது.பள்ளிக்கு சென்றபோதுதான் ரம்யாவுக்கு அடுத்த பிரச்சனை ஆரம்பமானது. பள்ளியில் ரம்யாவின் அருகில் யாரும் உட்காரவே மாட்டார்கள். சகமாணவர்களிடம் அவர்களின் பெற்றோர் அந்த பெண்ணை தொடக்கூடாது, பேசக்கூடாது என்று சொல்லி அனுப்புவார்கள். அதை அவர்கள் வந்து ரம்யாவிடம் கூறும்போது அழுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாதவராக இருந்தார். மாணவர்களும், பெற்றோர்கள்தான் அப்படி என்றால் ஒருசில ஆசிரியர்கள் கூட ரம்யாவின் மனதை நோகடித்துள்ளனர்.படிப்பு தவிர கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் எந்த ஊக்கத்தையும் அவர்கள் அளிக்கவில்லை. அவர் மாறுவேடப் போட்டி ஒன்றில் சேர்ந்தபோதும் யாரும் ஊக்கப்படுத்தவில்லை. ஆசிரியர் ஒருவர் தன்னுடைய கையால் தண்ணீர் வாங்கிக் கொடுத்தால்கூட பாவம் என்று திட்டிய சம்பவம் ரம்யாவின் மனதை வெகுவாகப் பாதித்தது.பள்ளியில் நடக்கும் சம்பவங்களால் மனத்தளவில் பாதிக்கப்பட்டு கதறி அழுதாலும் அதை வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று கூட அறியாத சிறுமியாக இருந்த ரம்யாவிற்கு இந்தச் சமூகம் தந்த பரிசு தனிமை மட்டுமே.வாழ்வில் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர் அவரது தாய். இந்த சமூகத்தின் கழுகுப் பார்வையில் இருந்து என்னைத் தப்பிக்கச் செய்ய அவர் செய்யாத வைத்தியமே இல்லை.அலோபதி, சித்த வைத்தியம் என அவர் செய்தவை அனைத்தும் ரம்யாவுக்கு சித்திரவதையாக தோன்றினாலும், தனது தாயின் கடமை மற்றும் நம்பிக்கை என்பதற்காக அவர் அனைத்தையும் பொறுத்துக்கொண்டார்.இருபது வயது இருக்கும்போது அம்மாவிடம் சண்டைபோட்டு முதலில் எனக்கு அளிக்கும் மருந்துகளை நிறுத்த வேண்டும் என்று அடம் பிடித்தார். இதற்கு முக்கிய காரணம் சிறு வயது முதலே பல்வேறு சிகிச்சை மேற்கொண்டதால் உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டார். இத்தனை மருத்துவ சிகிச்சைகளாலும் எந்த பயனும் கிடைக்கவில்லை. நிறவேற்றுமை குணமாகவும் இல்லை.சாப்பிட்ட மருந்துகளும் பின்விளைவு ஏற்படுத்தத் தொடங்கின.ஒரு முறை நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணை வரம் பார்க்க மணமகன் வீட்டார் வருவதால் தன்னை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு மணிக்கணக்கில் ரம்யாவின் தோளில் சாய்ந்து அவரது அம்மா கண்ணீர் விட்டு அழுதார். பேருந்தில் பயணிக்கும்போது தன்னை அருவருப்பாக பார்ப்பவர்களையும், தன் அருகில் உட்கார்ந்தால் நோய் தொற்றிக் கொள்ளும் என நினைத்து ஆடைகளை முழுவதும் போர்த்திக் கொள்பவர்களையும் பார்த்து மன வேதனை அடைந்தார். பலர் கொடுக்கும் இலவச ஆலோசனைகளை கேட்டபோதெல்லாம் ரம்யாவுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.பல நேரங்களில் தான் உயிர் வாழ வேண்டுமா என்றுகூட யோசித்திருக்கிறார்.இருந்தபோதும் ஒரு கட்டத்தில் என்னை உதாசீனப்படுத்தும் இந்த சமூகத்தைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று நினைத்தார். அனைத்தையும் தூக்கி எறிய முடிவு செய்தார். தனது அம்மாவிடம் சண்டை போட்டு ‘நான் இப்படித்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள், இனி எந்த சிகிச்சையும் எனக்கு வேண்டாம்’என்று ஆணித்தரமாக கூறினார். தனக்குள்ளேயே தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டார். அவமானங்களில் இருந்து கற்றவற்றை அனுபவப் பாடங்களாக்கி தனக்குத் தானே ஒரு பாதையை வகுத்துக்கொண்டார்.நான் இப்படித்தான் பிறந்தேன் இப்படியே இருக்க ஆசைப்படுகிறேன் என்று தைரியமாக வெளியில் வந்து பேசத் தொடங்கிய பிறகு தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட பலருக்கும் உந்து சக்தியாக மாறினார். வீட்டை வீட்டு வெளியே செல்லவே அஞ்சிய, இதே போன்று நோயால் பாதித்த பெண் ஒருவரை ஊக்கப்படுத்தி கல்லூரிப் படிப்பை தொடரவைத்தார்.தனது ஆறுதல் பேச்சு பலருக்கும் ஊக்கம் அளிப்பதாக அவர்கள் சொல்லும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, தன்னை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாற்றிக்கொண்டார். தன்னுடைய நிறவேற்றுமையை கொண்டாடுவதாகவும், இது எனக்கு ஒரு பிரச்சனை இல்லை, நான் அழகாக இருப்பதாகவே உணர்கிறேன் என்று ரம்யா சொல்லும் போது அதைக் கேட்டு பலரும் அவரைப் பாராட்டினார்கள். அது மட்டுமல்ல உங்கள் வார்த்தைகள் எங்களை ஊக்கப் படுத்துகின்றன என்றார்கள். என்னை யார் வேண்டுமானாலும் தொடலாம், நிச்சயம் என்னுடைய அழகை உங்களுக்கு கொடுக்கமாட்டேன்.இது எனக்கே எனக்கான அழகு அதுதான் என் அடையாளமும்கூட என்ற நம்பிக்கையோடும்,புன்னகையுடன் திகழ்கிறார் ரம்யா.இளநிலை விசுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ள ரம்யா, உதவி இயக்குனராக பணியாற்றிவருகிறார்.திரைப்பட இயக்குனராவதே தன்னுடைய எதிர்கால லட்சியம் என்று பயணித்து வரும் ரம்யா, மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். ‘‘இந்த சமூகம் எவ்வளவு வெறுக்கிறதோ அந்தளவுக்கு அதை நேசிக்கின்றேன். அதைவிட என்னை நேசிக்கின்றேன் என பெருமிதப்படுகிறார். நிராகரிப்புகளையும் அவமானங்களையும் கண்டு அஞ்சாமல், தன்னம்பிக்கையுடன் எதிர்த்து போராடி வென்ற ரம்யாவின் வாழ்க்கை இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை டானிக். தன்னம்பிக்கையாளர்கள் எப்போதுமே தோற்பதில்லை என்பது ரம்யாவின் வாழ்வு நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும். உங்களுக்கும் இத்தகைய தன்னம்பிக்கை இருந்தால், வெற்றி உங்கள் வாசல் தேடி வரும்….