வேலூர், நவ.26: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் அகர்பத்தி வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காட்பாடி செங்குட்டையை சேர்ந்தவர் பாஸ்கர்(48). இவர் அகர்பத்தி வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த விஜய்சர்மா(51). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த பொருட்காட்சியில் அகர்பத்தி விற்க சென்றனர். நேற்று முன்தினம் இருவரும் காரில் வேலூருக்கு திரும்பினர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு காரை எடுத்துக்கொண்டு பாஸ்கர் வெளியே சென்று விட்டாராம். சில மணி நேரம் கழித்து மீண்டும் விடுதிக்கு சென்று பார்த்தபோது விஜய்சர்மா அறையின் கழிவறையில் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த பாஸ்கர், வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய்சர்மா எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.
தனியார் விடுதியில் அகர்பத்தி வியாபாரி மர்ம சாவு வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே
0