குடியாத்தம், ஆக. 30: குடியாத்தத்தில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சாலையில் இடையூறாக நின்ற தனியார் பஸ்சுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். குடியாத்தத்தில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேரணாம்பட்டு வரை தனியார் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் அதிவேகமாக செல்வது, ஆபத்தான முறையில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது, ஏர் ஹாரன் பயன்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து பயணிகள் குடியாத்தம் போக்குவரத்து போலீசருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில், போக்குவரத்து போலீசார் இந்த பஸ்சை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டுக்கு பஸ் புறப்பட்டு சென்றது.
அப்போது நேதாஜி சிலை சந்திப்பில் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது இதன் பின்னால் ஆம்புலன்ஸ் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டதால் அவரை கொண்டு வர செல்ல வந்தது. ஆனால் பஸ் ஆம்புலன்சிற்கு வழி விடாமல் அங்கேயே தொடர்ந்து சுமார் 3 நிமிடம் இடையூறாக நின்றது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் அந்த தனியார் பஸ்சுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் மோட்டார் வாகன முதல் நிலை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.