சிவகங்கை, ஜூன் 5: மத்திய பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிறுவனத்தினரால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்டவர்களின் விவரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். கடந்த 2010ம் ஆண்டு தமிழகத்தில் மதுரையை மையமாக வைத்து நிறுவனம் செயல்பட்டது. ரூ.100ல் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி மாதம் தோறும் பணம் வசூலிக்கப்பட்டது. ஆறரை ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாக திருப்பித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 2014ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் செயல்பட்டது.
2015ல் நிறுவனம் மூடப்பட்டது. இதையடுத்து இந்த நிறுவனத்துக்கு எதிராக மதுரை குற்றப்பிரிவில் 2015ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் 2016ல் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 29.11.2018ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிறுவனத்தை சேர்ந்த பலரை கைது செய்ததோடு, நிறுவனம் தொடர்பான சொத்துக்களும் முடக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பணம் செலுத்திய அசல் சான்றிதழை சேகரிக்கவும், அவற்றை சரிபார்க்கவும் தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சிபிஐ சார்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட 13 இடங்களில் விவரங்கள் சேகரிப்பதற்கான தேதி சிபிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சிவகங்கையில் கலெக்டர் அலுவலக வளாக சமுதாயக் கூடத்தில் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் தினேஷ், உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சேகரிப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த அசல் ஆவணங்களை கொடுத்தனர். ஆய்வாளர் தினேஷ் கூறியதாவது: ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை இந்த விசாரணை முகாம் நடைபெறுகிறது என்றார். கூடுதல் விவரங்களுக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவை 044-24461959 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.