ஊட்டி, நவ. 19: ஊட்டியில் தனியார் நிதி நிறுவன பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி ஏடிசி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 15ம் தேதி வழக்கம் போல் ஊழியர்கள் காலையில் பணிக்கு வந்தனர். அப்போது, முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அந்த நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். மேலாளர் நேரில் வந்து பார்த்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்ஐ வனக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ரோந்து பணியின் போது போலீசார் சந்தேகத்தின் பேரில் ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள அன்பு அண்ணா காலனி பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி சண்முகம் (53) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், தனியார் நிதி நிறுவன கதவை தன் நண்பர்களான லவ்டேல் பகுதியை சேர்ந்த ஆரோன் (47), பிங்கர் போஸ்டை சேர்ந்த சந்திரசேகர் ஆகியோருடன் சேர்ந்து உடைத்து திருட முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஒரு சிலர் வந்ததால் தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சண்முகம் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் பூக்கடையும், ஆரோன் டீக்கடையும், சந்திரசேகர் ரியல் எஸ்டேட் பணியிலும் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.