கூடுவாஞ்சேரி, மே 27: கூடுவாஞ்சேரி அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 44 ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தில், பாலி ஹோஸ் என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, கூடுதலாக ஓர் உற்பத்தி பிரிவு தொடங்குவதற்கான பணிகள் நடந்தது. இந்நிலையில், கூடுதல் உற்பத்தி பிரிவில் புதிய உபகரணங்கள் பொருத்துவதற்கான வெல்டிங் பணியில் நேற்று 44 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலை 4:30 மணியளவில் அளவில் வெல்டிங் செய்தபோது தீப்பொறி சிதறி அருகே இருந்த பொருட்கள் மீது விழுந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் இருந்து 44 ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.