அம்பத்தூர், ஜூலை 30: தனியார் தொழிற்சாலையில் உள்ள குப்பை சேமிக்கும் இடத்தில் தீடீர் தீ ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் அருகே தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள குப்பை சேமிக்கும் இடத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றிக் கொண்டது. அந்த தீ மள மளவென அந்த இடம் முழுவதும் பரவியது. இந்த வளாகத்தில், இரும்பு தாதுக்களை உருக்குவதற்காக பயன்படுத்த வைத்திருந்த ராட்சத காஸ் சிலிண்டர் அருகிலும் தீ பற்றி கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஜெ.ஜெ நகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தீயை அணைக்கும் பணியில் மிகவும் சிரமம் இருப்பதாக தீயணைப்பு துறை தெரிவித்தனர். மேலும், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் எப்படி தீ பற்றியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தினால் அம்பத்தூர், கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகள் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால் முதியவர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர்.