சிவகங்கை, அக்.17: சிவகங்கை அருகே திருமாஞ்சோலையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நேற்று இக்கல்லூரி பஸ் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், பேராசிரியர்களுடன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது.
சிவகங்கை, மதுரை சாலையில் கரும்பாவூர் விலக்கு அருகே வந்த போது எதிரே படமாத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது. இதில் கல்லூரி பஸ்சில் இருந்த மாணவ,மாணவிகள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.