சேத்துப்பட்டு, செப்.3: சேத்துப்பட்டு அருகே தனியார் கல்லூரி பஸ் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மாணவிகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ் நேற்று சேத்துப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து, சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் கங்கைசூடாமணி கூட்ரோட்டில் பஸ்சை நிறுத்தி மாணவிகளை இறக்கிவிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, வேலூரில் இருந்து மேல்மலையனூர் நோக்கி சென்ற அரசு சிறப்பு பஸ் எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ்சின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
மேலும், கல்லூரி பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் 7 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதேபோல், அரசு பஸ்சில் பயணம் செய்த சுரேஷ்(37) தாமரைச்செல்வி(40), பானு(50), சற்குணசெல்வி(52), சுரேஷ்(39), உமாபதி(39), குமாரசாமி(39), முனியம்மாள்(72) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களையும் பொதுமக்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். அங்கு அவர்களுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் தகவல் அறிந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.