திருவாரூர், நவ. 30: திருவாரூர் மாவட்டத்தில் தங்களது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளாத தனிதேர்வர்கள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்வு மையங்களுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத (உரிமை கோரப்படாத) தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்கும் பொருட்டு அரசிதழில் அறிவிக்கை வெளிவிட அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் மேற்கண்ட ஆண்டுகளில் தேர்வெழுதி தேர்வு மையங்களுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்கள் தங்களது உரியஆதாரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் திருவாரூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் நேரில் சென்று பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.