பண்ருட்டி, ஜூன் 16: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள அக்கடவல்லி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபருக்கும் காதல் ஏற்பட்டு 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக நல அலுவலர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டதில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல மற்றொரு சம்பவத்தில், கடலூர் ஓ.டி. பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பண்ருட்டி அடுத்துள்ள பனப்பாக்கத்தை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் காதல் ஏற்பட்டு 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக நல அலுவலர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டதில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.