திருச்சி, ஆக.19: உலக புகைப்பட தின நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி திருச்சி தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரியில் சிறந்த புகைப்படங்களுக்கான கண்காட்சி மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்சியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து தலைமை உரை வழங்கினார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி உதவிப் பேராசிரியர் பாலாமணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வைல்டு லைஃப் போட்டோகிராபி அன்டு இம்போர்ட் என்ற தலைப்பில் பயிற்சிபட்டறை நடைபெற்றது.
இதில் புகைப்படம் எடுப்பதில் உள்ள நுணுக்கங்கள், புகைப்படம் எடுக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை, அதைவிட நாம் எதிர்பார்க்கும் அந்த நொடி புகைப்படம் கிடைக்க காத்திருப்பது மிகவும் அவசியம், அந்த நொடி தான் நம்முடைய வாழ்வில் மிக பொக்கிஷமான நொடி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சியும் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான புகைப்படப் போட்டியும் அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை தலைவர் முனைவர் பிளெஸ்ஸி ஒருங்கிணைத்திருந்தார்.
இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாநில அளவில் உள்ள கல்லூரியிலிருந்து காட்சி தொடர்பியல் துறை மாணவர்களும் பங்கேற்றனர். மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.