சாயல்குடி, ஆக.11: முதுகுளத்தூர் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 2 மான்களை நாய்கள் கடித்து குதறியதால் இறந்தது. முதுகுளத்தூர் அருகே கள்ளிக்குளம் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தேடி கிராமத்திற்குள் வந்த புள்ளி மானை நாய்கள் கடித்து குதறியது. இதில் மான் பலத்த காயமடைந்து இறந்தது. இதுபோன்று நேற்று முதுகுளத்தூரில் தண்ணீர் தேடி வந்த ஒரு புள்ளி மானை தெரு நாய்கள் கடித்து குதறியது. பலத்த காயமடைந்த 2 வயது பெண் மானை மீட்ட பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர் ஹரி சிகிச்சை முடித்து காட்டிற்குள் விட கொண்டுச் சென்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தது. இதனையடுத்து 2 மான்களையும் வனத்துறையினர் புதைத்தனர். சாயல்குடி பகுதியிலுள்ள நரிப்பையூர், ஒப்பிலான், ஏர்வாடி இதம்பாடல் போன்ற கடற்கரை காடுகளிலும், கடலாடி, ஆப்பனூர், கிடாத்திருக்கை, கொண்டுலாவி, பேரையூர், இறைச்சிக்குளம், கள்ளிக்குளம், பேரையூர் போன்ற பகுதிகளில் உள்ள மலட்டாறு காடுகளிலும் அதிகளவில் மான்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகிறது.
ஆண்டு தோறும் கோடையில் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் தேடி மான்கள் ஊர்பகுதிகளுக்குள் வரும்போது நாய்கள் கடித்து குதறியும், சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதும் அடிக்கடி நிகழ்கிறது. எனவே மான்களை காப்பாற்ற மலட்டாறு பகுதிகளில் மான் காப்பகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.