மதுரை, ஆக. 23: மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையை அடுத்த ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில் பழமையான நரசிங்கம் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கல் குவாரி அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த குவாரிகளுக்கான அனுமதி முடிவுக்கு வந்ததால், பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன. இதனால் கல் குவாரிகளில் உள்ள குழிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கடந்த ஆண்டில் இதில் விழுந்து 2 பெண்கள் பலியாகினர்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி, யானைமலை அடிவாரத்தில் செயல்படாமல் உள்ள குவாரிகளைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து போலீசார் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.