தண்டையார்பேட்டை, ஜூன் 6: தண்டையார்பேட்டையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, பெண் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆர்.கே நகர் போலீசாருடன் இணைந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை ஐஓசி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஒருவரை பிடித்து பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், தண்டையார்பேட்டை துர்கா தேவி நகரைச் சேர்ந்த அப்பாஸ் அலி (30) என்பதும், கூட்டாளிகளுடன் சேர்ந்து மெத்தபெட்டமின் போதைப் பொருளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்பேரில், வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 700 கிராம் மெத்தபேட்டமின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து அப்பாஸ் அலி மற்றும் அவரது கூட்டாளிகளான சேலையூர் காமராஜபுரத்தை சேர்ந்த பர்வேஸ் உசேன் (26), திருவொற்றியூர் காந்தி நகரை சேர்ந்த முகமது அலி (25), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த முகமது அசார் (26), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரியாஸ் கான் (26) மற்றும் செங்குன்றத்தை சேர்ந்த ஆமினா (எ) மீனா (46) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.35 லட்சம் மெத்தபெட்டமின் மற்றும், ஒரு துப்பாக்கி, 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், மெத்தபெட்டமின் விற்பனை வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.