ஆவடி: பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை, அத்திமூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் அன்பு (60). திருவண்ணாமலை, குன்று மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). இவர்கள் இருவரும், வயலாநல்லூரில் உள்ள செங்கல் சூளையில் கூலித் தொழிலாளிகளால பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில் இருவரும் நேற்று மாலை, பட்டாபிராம் காய்கறி சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு, பட்டாபிராம் ரயில் நிலையம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்டவாளத்தை கடந்தபோது சென்னையில் இருந்து ஹூப்ளி செல்லும் விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.