சென்னை, ஜூன் 28: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பயணிகள் ரயில் தடம் புரண்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து நேற்று இரவு சுமார் 9.10 மணி அளவில் பயணிகள் மின்சார ரயில் காட்பாடிக்கு புறப்பட்டு சென்றது. சித்தேரி ரயில் நிலையத்தில் நின்று, மீண்டும் இரவு 9:30 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தம் வந்த நிலையில், ரயில் தடம் புரண்டது.
உடனே சாதுர்யமாக செயல்பட்டு டிரைவர் ரயிலை நிறுத்தினார். பின்னர் கீழிறங்கி பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இரண்டாக உடைந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு இடங்களில் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், அரக்கோணம் – காட்பாடி மார்க்கத்தில் ரயில் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.