திருவாடானை: திருவாடானை பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் நெற்களஞ்சியம் திருவாடானை தாலுகா என்று அழைக்கப்படுகிறது. இத்தாலுகாவில் 26 ஆயிரம் ெஹட்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோடை காலத்தில் பெய்த சிறு மழையை வைத்து உழவு செய்யப்பட்டு நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருவாடானை வட்டாரத்தில் பல கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு பயிர் முளைக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் தேவையான மழை பெய்தவுடன் விவசாயிகள் நெல் பயிருக்கு அடி உரம் இடுவதற்கு தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் ரசாயன உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பாக கால்நடைகளை வைத்து கிடைபோட்டு விவசாயம் செய்து வந்தோம். இப்போதெல்லாம் கால்நடைகளும் இல்லை. இயற்கை உரமும் கிடைக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க ரசாயன உரங்களை நம்பியே நெல் விவசாயம் செய்யப்படுகிறது. அதனால் உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் உரத்தட்டுப்பாடு ஏற்படும்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசு வழங்கியது. தனியார் கடைகளிலும் ஓரளவு உரம் கிடைத்து வந்தது. அதேபோன்று இந்த ஆண்டும் முன்கூட்டியே ரசாயன உரம் தட்டுப்பாடு இன்றி வழங்க கூட்டுறவு சங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டுப்பாடு இன்றி தனியார் கடைகளிலும் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மகசூல் பாதிப்பின்றி விவசாயம் செய்ய முடியும் என்றனர்.