தூத்துக்குடி, ஆக. 26: தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்புத் துறையினர் 120 கடைகளில் சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில், கடந்த ஒரு வாரத்தில் 120 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். 4 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதில் கயத்தாறு பஸ் நிலையத்தில் ஒரு கடையில் தொடர்ந்து 5வது முறையாக தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடை உரிமையாளருக்கு ஏற்கனவே 2021ல் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அந்நபரின் கடைக்கு எதிராக உணவு பாதுகாப்பு ஆணையர் கடந்தாண்டு அவசர தடையாணை பிறப்பித்து, ஒரு மாதம் கடை மூடப்பட்டு இருந்தது. கடந்த 19ம்தேதி மீண்டும் இதே கடையில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதையடுத்து கடையின் உணவு பாதுகாப்பு உரிமமானது, எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடை உரிமையாளர், 3 மாதங்கள் வரை உணவு பாதுகாப்பு உரிமம் பெற இயலாது. மேலும் கோவில்பட்டியில் 2 கடைகளும், உடன்குடியில் ஒரு கடையையும் தொடர் விசாரணைக்காக அக்கடைகளின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்ய உடனடியாக உத்தரவிட்டு 2 கடைகளையும் சீல் வைக்க நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த ஜூலை மாதத்தில் 10 கடைகள் மூடப்பட்டு, 15 நாட்கள் கழித்து, தலா ரூ.5000 வீதம் 10 கடைகளுக்கும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டு, உணவு வணிகம் தொடர அனுமதிக்கப்பட்டது. உணவு வணிகர்கள் யாராவது தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக கடைகள் மூடப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டால் 3 மாத காலம் உணவு வணிகம் செய்ய இயலாது. இந்த விவகாரத்தில் எந்தவித தளர்வும் வழங்கப்படாது. இத்தகவல் உணவு பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.