ஈரோடு, ஆக.24: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட சூரியம்பாளையம், அமராவதி நகர் பகுதியில் நேற்று முன்தினம் சோதனையிட்டதில் அங்குள்ள முட்டை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (55) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பெருந்துறை போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட மல்லீசன்புரம், முருகன் கோவில் அருகில் உள்ள மீன் கடை ஒன்றில் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினாள் (60) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேற்கண்ட இருவரிடமிருந்தும் 45 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.