கிருஷ்ணகிரி, ஆக.23: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ₹10,750 அபராதம் விதிக்கப்பட்டது. பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், இறைச்சி கடைகள், காய்கறி கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ₹10 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்களுக்கு கேரி பேக்ககளில் வழங்க வேண்டாம் எனவும், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது ஆய்வின் போது தெரிய வந்தால், கடைஉரிமையாளர்களுக்கு ₹ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.