திருப்பூர், ஜூன் 8: திருப்பூர் மாநகரப் பகுதியில், தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் வீல் லாக் செய்து அபராதம் விதித்தனர். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் வருகைக்கு ஏற்ப வாகனங்களும், வணிக நிறுவனங்களும் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகர பகுதியில் வாகன பெருக்கத்திற்கேற்ப சாலைகள் வசதிகள் இல்லை. இந்நிலையில் திருப்பூரின் முக்கிய பகுதிகளான காமராஜ் ரோடு, குள்ளிசெட்டியார் வீதி, பெரியகடை விதி, மாநகராட்சி அருகாமை பகுதிகளில் உள்ள வணிக நிறுவத்திற்கு வரும் பொதுமக்கள் ரோடுகளில் தங்களது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சென்று விடுகிறார்கள்.
அப்படி ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கும், ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதற்கும் தீர்வு ஏற்படுத்தக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி அருகாமை பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடத்தில் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களுக்கு தெற்கு போக்குவரத்து போலீசார் வீல் லாக் செய்து அபராதம் விதித்தனர். மேலும் தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை என்ற அறிவிப்பும் வைத்துள்ளனர்.