தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தஞ்சாவூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் புதுப்பட்டி சுரேஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தஞ்சாவூரில் அரசு அனுமதி பெற்று, வழிகாட்டுதலை பின்பற்றி 10-க்கும் மேற்பட்ட கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக கனிமவளத்துறை உதவி இயக்குனராக பொறுப்பேற்றவர் கிராவல் குவாரி லாரி உரிமையாளர்களுக்கு மண் எடுப்பதற்கு உரிமம் வழங்குவதில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கிராவல் மண் எடுக்க முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், லாரி உரிமையாளர்கள் லாரிக்கு மாத கடன் தவணை செலுத்த முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கட்டிட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வேலை இழந்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்படி, தடையின்றி கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கி தஞ்சாவூர் மாவட்ட லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது செயலாளர் சிங்.அன்பழகன், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.முன்னதாக மனு அளிக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.