தஞ்சாவூர், நவ. 14: தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 32-வது மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். தஞ்சாவூா் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நேற்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 32-வது மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில், ‘நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(மேல்நிலை) தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மாணிக்கத்தாய், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
இந்த குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, வழிகாட்டி ஆசிரியர் அனுபவங்களை பள்ளிக்கல்வித்துறை மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து, ‘நீர் சூழலும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் தஞ்சை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராம் மனோகர், நீர் சார்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும் என்ற தலைப்பில் சரபோஜி கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் மாரியப்பன், நீரினால் பரவும் நோய்கள் என்ற தலைப்பில் பட்டதாரி ஆசிரியர் கமலா, நீர் அனைவருக்குமானது என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் பேசினர்.
இதில், கலந்து கொண்ட 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளுக்கு வழி காட்டுவர். அதை தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பர். அதில், வெற்றி பெறும் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் மாநில அளவுக்கு தகுதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை, மாவட்டத் துணைத் தலைவர் தியாகராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் மஞ்சுளா, தவச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.