ஒரத்தநாடு, ஜூன்.5: தஞ்சை, பட்டுக்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகளை தஞ்சாவூர் தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் த.மதன்குமார் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலை இருவழிச் சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையை பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத்துறை ஒரத்தநாடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட துறையூர் முதல் ஒரத்தநாடு வரை உள்ள சாலையானது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இந்த பணிகளை தஞ்சாவூர் தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் த.மதன்குமார் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் கணம், வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்தார். இந்த ஆய்வின்போது தர கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால், ஒரத்தநாடு உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் விஜய், விமல் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.