தஞ்சாவூர், ஆக. 24: தஞ்சையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ‘சம்பா தொகுப்பு திட்டம்’ அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தினர்.தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விவசாயிகள் தங்களது மனுக்களை வழங்கினர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் மற்றும் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மேட்டூர் அணை திறந்து மூன்று வாரங்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. ஒரு போக சம்பா சாகுபடியை தொடங்கிட கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு போய் சேர்க்க நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருபோக சம்பா சாகுபடியை தொடங்கும் விவசாயிகளுக்கு ‘சம்பா தொகுப்பு திட்டம்’ அரசு அறிவிக்க வேண்டும்.
கடந்தை ஆண்டை போல் ‘விலையில்லா ரசாயன உரம்’ வழங்க வேண்டும். இயந்திர நடவிற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4000 வழங்குவது போல் நடவு செய்த அனைவருக்கும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ பணம் கிடைக்காத தகுதியான பெண்கள் புகார் மனு அளிப்பதற்கு அதனை வாங்குவதற்காக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல், தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை வேங்கராயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்த மானாவாரி விவசாயிகள் மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.